(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் அபராதத்தை 2500 ரூபாவிலிருந்து 1இலட்சம் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தினை வெகுவிரைவில் திருத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய உணவு பொருட்களின் விற்பனை விலை தொடர்பில் அரசாங்கம் நியமித்துள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடும் அபராதம் 2500 ரூபாவாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தினால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகிறது. அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும். என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  சட்ட மூலத்தை முழுமையாக திருத்தம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும். ஆகவே 2500 ரூபா தண்டப்பணத்தை 1 இலட்சமாக அதிகரிக்கும் யோசனைக்கு மாத்திரம் தற்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதற்கமைய தண்டப்பணத்தை 1 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை முதல் வெற்றியாகும் என்றார்.