(எம்.மனோசித்ரா)
சுகாதார தரப்புக்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும்.
நாட்டை முழுமையாக முடக்குவது எமது தீர்மானங்களில் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தனர்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில் ,
முழுமையாக ஊரடங்கினை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. காரணம் அரச ஊழியர்களுக்கு அவர்களுக்கான ஊதியம் கிடைக்கப் பெறுவதால் அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
எனினும் தனியார் துறைகள் 50 வீத சம்பளத்தை வழங்குவதாகவே தெரிவிக்கப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இதனை நாம் எமது தீர்மானங்களில் இறுதி தெரிவாகவே கொண்டுள்ளோம். உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதானிகளின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் தற்போதுள்ள சிறந்த தீர்வு தடுப்பூசி ஏற்றுதல் மாத்திரமேயாகும்.
செப்டெம்பர் மாத இறுதிக்குள் 18 வயதை விடக் கூடிய சகலருக்கும் இருகட்ட தடுப்பூசியை வழங்குவதே எமது இலக்காகும், எனத் தெரிவித்தார்.