(எம்.மனோசித்ரா)

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர்கள் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய வணக்கத்தலங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானம் |  Virakesari.lk

 

அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய இந்த குழுவின் அறிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில் ,

1994 இல் அப்போதைய கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரணவினால் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்ட போதிலும் , அதன் பின்னர் ஏனைய அரச துறையில் உருவாகிய சம்பள முரண்பாடுகளால் 1997 இல் அந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அன்றிலிருந்து தற்போது வரை எந்தவொரு அரசாங்கமும் இந்த முரண்பாட்டுக்கான தீர்வினைக் காண எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால் 2016 இல் ஸ்ரீலங்கா பொதுஜய பெரமுன உருவாக்கப்பட்ட பின்னர் அதிலிலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பிரதிபலனாக முதன்முறையாக தேர்தல் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டது. 

கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கியது மாத்திரமின்றி கடந்த ஆண்டு ஜனவரியில் அப்போதைய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் துரதிஷ்டவசமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் அச்சுறுத்தலால் இவ்விடயத்தில் துரித தீர்மானத்தைக் காணமுடியாத நிலைமை ஏற்பட்டது என்றார்.