உள்நாட்டு சந்தையில் தற்போது எழுந்துள்ள பால்மா பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போதைய இறக்குமதி வரி அல்லது பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத பிற நடவடிக்கைகளை திருத்துவதன் மூலம் உள்நாட்டு சந்தையில் விலையை அதிகரிக்காமல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ள போதிலும் நுகர்வோரின் நன்மை கருதி  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இறக்குமதி நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை மற்றும் அதில் காணப்படுகின்ற சிக்கல்களினால் தற்போது சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு நிலவுகிறது. 

இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்காக பால்மாவிற்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த தீர்மானம் அரசாங்கத்தின் வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் , முழுமையாக நுகர்வோரின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் கேள்விக்கு ஏற்ப 100 வீதம் பால்மா உற்பத்தி செய்ய முடியும். எவ்வாறிருப்பினும் தேசிய உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பால்மா இறக்குமதி செய்யப்படுகிறது. 

பால்மா உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். 

அத்தோடு தேசிய ரீதியிலான பால்மா உற்பத்தியை முழுமையாக முன்னெப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு , இது தொடர்பில் தனியார் துறையினரும் ஆர்வம் காண்பித்துள்ளனர் என்றார்.

இதே வேளை நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் , பால்மா தட்டுப்பாடு தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளுர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளுர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.