ஆர்.யசி

கொவிட் -19 வைரஸ் பரவலில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரிக்கும் நிலையொன்று காணப்படுவதாகவும், நிலைமைகளை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் பரவலின் காரணமாக வைரஸ் தொற்றாளர்களுக்கு ஒட்சிசன் தேவைப்பாடு  அதிகரிக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துவருகின்ற நிலையில், உண்மை நிலவரம் குறித்து பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்திடம் வினவியபோது அவர் கூறுகையில்,

இலங்கையில்  கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அவர்களுக்கு தேவைப்படும் ஒட்சிசன் சுகாதார தரப்பிடம் கைவசம் உள்ளது.

ஆனால் டெல்டா வைரஸ் பரவல் அதிகரிப்பு காராணமாக எதிர்காலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படலாம். இப்போதும் ஒரு சில மட்டங்களில் ஒட்சிசன் தேவைப்பாடு ஏற்பட்டு வருகின்ற காரணத்தினால் தான் வெளிநாடுகளில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஒட்சிசன் என்பது வாழ்வோடு தொடர்புபட்ட விடயமாகும், ஒட்சிசன் அதிகமாக இறக்குமதி செய்வதனால் நாம் தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்க வேண்டாம்.

சமூகத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைய வேண்டும். அதற்கான நடவடிக்கையையே நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாடு முடக்கப்படுமா என்பது குறித்து எம்மால் தீர்மானம் எடுக்க முடியாது, ஆனால் கொவிட் செயலணிக் கூட்டத்திலும் நாட்டை முடக்குவது குறித்து இன்னமும் எடுக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என கூறவும் முடியாது. ஏனென்றால் கடந்த காலத்திலும் நாடு முடக்கப்படாது என தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் ஒரு மணித்தியாலத்தில் தீர்மானம் மாற்றப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 

எனவே நாட்டின் நிலைமை மோசமடையும் வேளையில், சுகாதார தரப்பினர் இறுக்கமான கோரிக்கைகளை முன்வைத்தால் அதிரடி தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அடுத்த மூன்று வாரகாலம் மிக அவதானம் மிக்கதாகும். இந்த காலகட்டத்தில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.

சுகாதார வழிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றுங்கள். சகலரும் இந்த வைரஸ் பரவலில் பாதிக்கப்படலாம், எனவே சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சகலரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே எம்மால் மீள முடியும். பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவசியமே ஆனால் மக்களே தமது அனாவசிய பயணங்களை தடுக்க வேண்டும்.

சட்டத்தின் மூலமாக நாட்டை முடக்குவதன் மூலம் அவசியமான தரப்பினருக்கும் பணியாற்ற முடியாது போகும். இது பொருளாதார ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயணக்கட்டுப்பாட்டை பிறப்பிக்க வேண்டும் என்பதும் எமது யோசனைகளில் ஒன்றாகும், அதை தவிர வேறு பல யோசனைகளையும் முன்வைத்துள்ளோம். இப்போது எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமோ அதனை நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.