(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மற்றும் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்  ஆகிய இரண்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது எனது கனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரரான லசித் மாலிங்கவுடனான  நேர்காணலொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் வனிந்து ஹசரங்க கூறுகையில்,

"அண்மையில் நிறைவடைந்த இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிந்தது. இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் இரண்டிலிருந்து எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. 

எனினும், உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லை. இது தொடர்பில் அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.   

எனக்கு இப்போது 24 வயதுதான்  ஆகிறது. ஐ.பி.எல் போன்ற கிரிக்கெட் தொடரில் விளையாடுவதால் மிகச் சிறந்த அனுபவத்தை பெறலாம். மிகச் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சிறந்ததாகும் " என்றார்.