எத்தியோப்பிய வெளிவிவகார அமைச்சர் டெட்ரொஸ் அதநொம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து நிலையான அபிவிருத்தி இலங்குகளுக்கான அவரது அர்ப்பணிப்புகளைப் பாராட்டினார்.

இலங்கைக்கும் எத்தியோப்பியாவுக்குமிடையிலான வரலாற்று ரீதியானதும் பாரம்பரிய ரீதியானதுமான சுமுகமான உறவுகளை நினைவுகூர்ந்த அவர் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் தமது நாட்டில் தூதரகம் ஒன்றை திறந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

சுகாதார பராமரிப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை நடைமுறைகள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிவரும் தலைமைத்துவத்திற்காக ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஆபிரிக்க ஒன்றியத்துடனான இலங்கையின் பலமான உறவுகளை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். நாங்கள் ஒரு முதலீட்டு நட்புடைய நாடு என்றும் நாம் எல்லா பிராந்தியங்களில் இருந்தும் முதலீடுகள் செய்யப்படுவதை எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சவால்மிகுந்த ஒரு காலப்பகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து டெட்ரொஸ் அதநொமின்; பங்களிப்புகளை ஜனாதிபதி பாராட்டினார்.

எத்தியோப்பிய வெளிவிவகார அமைச்சர் டெட்ரொஸ் தற்போது கொழும்பில் நடைபெறும் உலக சுகாதார தாபனத்தின் தென்கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்குபற்றுகிறார்.

எத்தியோப்பியா சுமார் 100 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட மிகப்பெரும் விவசாய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். விவசாய அடிப்படையிலான கைத்தொழில்துறையில் அந்நாடு பல கட்டமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆடை உற்பத்தித்துறையில் இலங்கை நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.