பண்டாரவளை பஸ் நிலையத்தில் இன்று (09-08-2021) பகல் இருவர் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு மயக்கமுற்ற இருவருக்கும் கொரோனா தொற்றாளர்களாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் பண்டாரவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். 

இதையடுத்து அவருக்கு ' அன்டிஜன்' பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொவிட் தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

அத்தோடு, பண்டாரவளையில், உணவகம் ஒன்றுக்கு சென்ற ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், அவர் உடனடியாக பண்டாரவளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் , பல மணித்தியாலங்கள் ஆகியும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கும் ' என்டிஜன்' பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில். அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கீழே விழுந்த குறித்த இருவரையும் எவருமே தூக்க முன்வராத போதிலும் பொலிசார் கொவிட் தொற்று பரிசோதனையாளர்களை வரவழைத்து குறித்த இரு நபர்களையும் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

பண்டாரவளை பஸ் நிலையத்தில் உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு.  மற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கொஸ்லந்தையில் தனது வீட்டில் கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்று வந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று பகல் வீட்டிலேயே  உயிரிழந்ததாக அப்பிரதேச பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.