நவீன ஒலிம்பிக்கின் 125 வருட வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டிகளில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு வென்றுகொடுத்த ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சொப்ரா, அதனை விட உயரிய இலக்குக்கு குறிவைத்துள்ளார்.

டோக்கியோ விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பங்குபற்றியபோது எவ்வித அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை என சொப்ரா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் தலைநகரான டெல்லியிலிருந்து வெகுதொலைவில் உள்ள காந்த்ரா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொப்ரா, 87.58 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்து 103 கோடி சனத்தொகையைக் கொண்ட இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தார்.

தன்னுடன் போட்டியிட்டவர்களுக்கு, குறிப்பாக ஜெர்மனி வீரர் யொஹானெஸ் வெட்டருக்கு போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அழுத்தம் கொடுக்கும்வகையில் தன்னாலான அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்தியதாக சொப்ரா குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதத்துக்கும் ஜுன் மாதத்துக்கும் இடையில் 7 தடவைகள் 90 மீற்றர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிந்த வெட்டரின் அதிசிறந்த தூரப்பெறுதி 96.29 மீற்றராகும். ஆனால், அவரால் முதல் எட்டு இடத்துக்குள் வர முடியாமல் போனது.

'முதலாவது எறிதல் நேர்த்தியாக அமையுமேயானால் நம்பிக்கை அதிகரிக்கும். எனது இரண்டாவது எறிதலும் மிகச் சிறப்பாக அமைந்தது (தங்கப் பதக்கத்தை வெல்லவைத்த தூரம் 87.58 மீ.),' என சொப்ரா குறிப்பிட்டார்.

தனது இந்த வெற்றி இந்திய மெய்வல்லுநர்துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

வருங்காலத்தில் 90 மீற்றருக்கு அப்பால் ஈட்டியை எறிவதே தனது குறிக்கோள் என தங்கம் வென்றதன்மூலம் அதிர்ஷ்டசாலியான நீராஜ் சொப்ரா தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தார் நகரில் உள்ள லவ்லி தொழில்சார் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டப்படிப்பை சொப்ரா தொடர்கின்றார்.

ஒலிம்பிக் மெய்வல்லுநர் வரலாற்றில் இந்தியாவின் பெயரை புகழ்பெறச் செய்த நீராஜ் சொப்ராவுக்கு 20 இலட்சம் டொலர்களுக்கு மேற்பட்ட பணப்பரிசு மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாக இந்திய நிறுவனங்கள், மத்திய அரசு முதல் மாநில அரசுகள் உறுதிவழங்கியுள்ளன.

  

ஒலிம்பிக்கில் சொப்ரா தங்கம் வெள்றதைத் தொடர்ந்து இந்தியாவில் இரசிகர்கள்  ஆரவாரம் செய்து அவரைப் பாராட்டினர்.

- (என்.வீ.ஏ.)