தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக “த மெயில்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

தலிபான்கள் புதிய நகரம் அல்லது மாவட்டத்தைக் கைப்பற்றும் போதெல்லாம், உள்ளூர் மசூதிகளின் பேச்சாளர்கள் மூலம் அனைத்து உள்ளூர் பெண்கள் மற்றும் விதவைகளின் பெயர்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  தலிபான்களுக்கு  அஞ்சும்  மக்கள் தங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். 

பெண்கள் பர்தா அணிந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானின் - பாமியான் மாகாணத்தின் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள தொலைதூர மாவட்டமான சைகானின் தலிபான் போராளிகள் அப்பகுதியில் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. போராளிகளை எதிர்க்கும் ஆண்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் பயந்துபோன கிராம மக்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி  வருகின்றனர். அதேபோன்று பாமியான் மாகாண ஆளுநர் முகமது தாஹிர் ஜுஹைர் கூறுகையில், 

பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணத்திற்கு தலிபான்களால் உட்படுத்தப்படுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகினறனர். 

ஆப்கானிஸ்தான் விமானத் தாக்குதலில் லஷ்கர்காவிற்கு வெளியே 45 தலிபான்கள் மற்றும் 3 அல்கொய்தா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.