அழிவடைந்து வரும் யாழ் வல்லிபுர பிரதேச மண் வளம்

Published By: J.G.Stephan

09 Aug, 2021 | 12:40 PM
image

மணல் அகழ்வு என்பது உலகளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு மோசமான மனித நடவடிக்கையாக காணப்படுகின்றது. கடற்கரையோரங்கள், ஆறுகள் என மணல் அகழ்வு உலகளவில் இடம்பெறுகின்றது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கானதல்ல. இலங்கையின் பல பாகங்களிலும் மணல் அகழ்வு மோசமான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வல்லிபுர பிரதேசம் அமைகின்றது. 

மக்களுக்கு மணல்  தேவை இருப்பது உண்மை எனினும் அத்தேவை அரசாங்கத்தால் சட்ட ரீதியாக அகழ்ந்து வழங்கப்படும். இதனை விடுத்து சட்ட ரீதியற்ற முறையில் மணல் மாபியாக்களிடம் மக்கள் மணலை அதிக விலையில் கொள்வனவு செய்வதனால் இலாப நோக்கு அடிப்படையில்  மண் பாரியளவில் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது. இதனால் பல சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களும் ஏற்படுகின்றன.

வல்லிபுரம் என்பது இலங்கையின் வட பகுதியிலுள்ள யாழ்பாணக்குடா நாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு கிராமமாகும். தரைத்தோற்றம் கரையோரச்சமவெளியாக காணப்படுவதனால் மணல் செறிவடைந்து காணப்படுகின்றது. இவ் மணல் குவியல்களே இப்பிரதேச அடையாளமாக காணப்படுகின்றது. வல்லிபுர பிரதேசத்தை பொறுத்தவரையில் அதிகமானளவு மணல் அகழ்வு நடவடிக்கை சட்டரீதியான முறையிலும் சட்ட ரீதியற்ற முறையிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ஆரம்ப காலத்தில் இப்பிரதேசத்தில் மணல் கனிமமானது மிகவும் செறிந்து காணப்பட்டது. கான்கிறீட் தயாரிப்பதில் 35சதவீத பங்கினை மணல் கொள்வதனால் கட்டட நிர்மாணிப்புக்களின் பொருட்டு மணல் தேவைப்பாடு அதிகரித்து வருகின்றது. மக்களின் தேவையின் பொருட்டு அரசு சட்டரீதியான மணல் அகழ்வினை மேற்கொண்டு வருகின்றது. 

இருப்பினும் பண இலாபங்களை மட்டும் இலக்காக கொண்ட மணல் மாபியாக்கள் சட்டரீதியற்ற முறையில் மணலை அகழ்ந்து வருகின்றன. மக்களும் மணல் தேவையின் பொருட்டு அதிக விலை கொடுத்து மணலை மணல் மாபியாக்களிடம் வாங்குகின்றனர். இதனால் மணல் மாபியாக்களுக்கு இலாபம் அதிகமாக கிடைப்பதனால் ஏனையோரும் இத்தொழிலில் உள்நுழைகின்றனர்.

இப்பிரதேசத்தில் மணல் அகழ்வதனால் ஏற்படுகின்ற சூழல் சார் பிரச்சினைகளை நோக்குவோமாயின் இப்பிரதேச கடற்பரப்பு மணற் கடற்பரப்பாக இருப்பதனால் இங்கு அலைகளின் வேகம் அதிகரித்தே காணப்படும். மணல்  அகழ்வு தொடர்ந்து கொண்டிருப்பதனால்  அலையின் வேகம் மேலும் அதிகரித்திருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் மக்களுக்கு கடலுடனான நெருங்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. 

மழை காலங்களிலான மண்ணரிப்புக்கும் இது வழி கோலுகின்றது. பரவலாக மண் அகழ்வு காரணமாக ஏற்படும் மண்ணரிப்பானது  வருடத்திற்கு 1m ஆகக் காணப்படுகின்றது. கடற்கரையிலே மணலில் பல வகையான தாவரங்கள் செறிந்து காணப்படும். இவை மருத்துவ குணமுடையவையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் அமைகின்றன. மோசமான மண் அகழ்வு காரணமாக தாவரங்களுடன் சேர்ந்து அதில் வாழும் உயிரினங்களும் அழிவடைகின்றன. மேலும் மணலை தொடர்ந்து அகழ்ந்து வருவதனால் கிராமத்தில் காணப்படும் நன்னீர் ஊற்றுக்கள் உவர் நீராக மாறி வருகின்றன. இதனால் இவ்வூர் மக்கள் மண்ணோடு சேர்த்து தமது நன்னீரையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

ஒழுங்கற்ற மணல் அகழ்வினால் மீன் வளமும் குன்றுகின்றது. ஏனெனில் மீன்கள் முட்டை இடும் பகுதிகளும் அகழ்வின் போது பாதிப்புக்குள்ளாகின்றன. மீன்கள் மட்டுமல்ல முதலைகள், கடல் ஆமைகள் என பல உயிரினங்களின் இனப்பெருக்கமும் பாதிப்புக்குள்ளாகின்றது. சுனாமி அனர்த்தம் ஏற்படுகின்ற போது அதனுடைய வேகத்தையும் உள் நுழைதலையும் கட்டுப்படுத்துவதில் இம் மணல் மேடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சுனாமி  அச்சுறுத்தலுக்கு உள்ளாகி காணப்படும் இக்கிராமத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் மணல் அகழ்வானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய விடயமாகும். சட்ட ரீதியற்ற முறையில் மணல் அகழ்கின்ற போது அது மிகவும் வேகமாகவும்  மோசமாகவும் மேற்கொள்ளப்படும். இதனால் எழும் தூசுக்கள் காற்றை மாசாக்குகின்றது. இவ்வாறு  மணல் எனும் மண்வளத்துடன் நன்னீர், சுத்தமான காற்று என்ற மூன்று முக்கிய சுற்றுச்சூழல் பிரிவுகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. 

 மேலும் சட்ட ரீதியற்ற முறையில் மணல் அகழ்வை மேற்கொள்ள மணல் மாபியாக்கள் கனரக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதிகாலை, இரவு போன்ற வேளைகளில் இம்மணல் அகழ்ந்தெடுப்புக்களைச் செய்கிறார்கள். கனரக வாகனங்கள்  இக்கிராமத்தில் அதிகமாக போக்குவரத்து செய்வதனால் வீதிகள் சேதமடைந்து போகின்றன. புனரமைப்பு இடம்பெறினும் மணல் கொள்ளை தொடர்வதனால் வீதிகள் சேதமடைந்தவையாகவே இருக்கின்றன. அத்துடன் சட்ட விரோத மணல் அகழ்வு தண்டனைக்குரியது என்பதால் இவ் வாகனங்களின் வேகம் மோசமாக அமைகின்றது. இதனால் வீதிவிபத்துக்களும் அதிகமாக ஏற்படுகின்றன.

தொடர்ந்து பொருளாதார ரீதியான பாதிப்புக்களை நோக்கினால் இப்பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் இடமாக இருக்கின்றது. இப்பிரதேச மணல் மேடுகளை பார்க்க வருவோர் ஏராளம், ஆனால் இவ் மணல் மேடுகள் காணாமல் போய் சூழலின் தரமும் குன்றிப்போவதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் எதிர் வரும் காலங்களில் குறைந்து கொண்டே செல்ல வாய்ப்புள்ளது. 

சுற்றுலா பயணிகளினால் வருமானம் உழைக்கும் இப்பிரதேச முறைசாரா பிரிவினர் தமது வருமானத்தை இழக்க நேரிடும். இப்பிரதேச மணல்  என்பது வெறுமனே மண் வளம் மட்டுமல்ல  சிலிக்கா வகையை சார்ந்த மணல் கனிமமாகும். இது பல்வேறுபட்ட  தொழில்நுட்ப உற்பத்திகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உகந்தது. இதனை நாம் கட்டட நிர்மாணங்களுக்காக கொட்டிக்கொண்டிருக்கின்றோம் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

 சட்ட விரோத மணல் அகழ்வுக்கு தண்டனைகள் வழங்கப்படினும் அவை மேலும் இறுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.  சட்டங்களும் தண்டனைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். வழங்கப்படுகின்ற தண்டனைகள் மனிதனை காப்பவையாக மட்டுமே இருக்கின்றன தவிர மண்ணையோ சூழலையோ காப்பனவாக இல்லை.  பிரதேச மக்களில் பலர் மணல் அகழ்வு தொடர்பாக பூரண அறிவைக் கொண்டவர்களாக இல்லை. இதனால் மக்களிடையே மணல் அகழ்வு தொடர்பான விழிப்புணர்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பிரதேச மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் இது பற்றிய அறிவு அவசியமானதே.

மக்களுக்கு தேவையான அனைத்து மணல் தேவைகளும் அரசாங்கத்தினால் சட்ட ரீதியான முறையில் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் தேவையற்ற கட்டட நிர்மாணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடற்கரைப்பகுதியில் அழிவடைந்துள்ள தாவரப்போர்வைகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இது அரசின் பொறுப்பு மாத்திரமல்ல, இப்பிரதேச மக்களுக்கும் உரித்தான பொறுப்பாகும். மணல் அகழ்வு முற்றாக நிறுத்த இயலாத ஒன்றாக இருந்த போதும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகும். மணல் அகழ்வில் ஈடுபடும் மணல் மாபியாக்களினை முற்றாக தடை செய்து மணற் கொள்ளையினை நிறுத்த வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு கொள்கைகளை இப்பிரதேசத்தில் உரிய முறையில் அமுலாக்கம் செய்ய வேண்டும். இப்பிரதேச மணல் சிலிக்கா வகையை சார்ந்ததாக இருப்பதனால் பல தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இயலும். ஆகவே அதற்காகிய நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இக்கட்டுரையானது யாழ்.பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் சிரேஷ் விரிவுரையாளர் செல்வி.கே.கருணாநிதியின் வழிகாட்டலில் பொருளியில் மற்றும் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களான எஸ்.சிற்சபேசன், என்.நிவித்திதா, எஸ்.பாமதி ஆகியோரில் பங்களிப்பில் எழுப்பதப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளும் பொறுப்புக்களும்

2024-12-11 17:06:28
news-image

சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்...! - சித்திரவதை...

2024-12-11 13:22:24
news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32