(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு  கொள்கை திட்டத்தின்  கீழ் கிராமிய   மக்களின் உள்கட்டமைப்பை வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'கிராமங்களை இணைக்கும் இதயத்தின் பாலம்' என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட 5000 கிராமிய  பாலங்களை நிர்மாணிக்கும் திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்   தலைமையில் நெடுஞ்சாலை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இந்தப் பாலம் நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம்  கோரிக்கை விடுத்திருந்தனர். 

அண்மையில் பாராளுமன்றத்தில் அமைச்சரை சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.  

இந்த வருடம்  1000 பாலங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. 700 க்கும் மேற்பட்ட கிராமப்புற பாலங்களை நிர்மாணிக்கும் பணிகள்  ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிவின் தலைவரும் நிதி அமைச்சருமான  பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ், கிராமத்தின் இதயம்  பாலம் திட்டமானது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்  முழுமையான  மேற்பார்வையின் கீழ் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் இலங்கையில் உள்ள ஒவ்வொரு  தேர்தல்  தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருவதால், நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும்,  திட்டமிட்டவாறு தடையின்றி  எவ்வாறு  முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட  அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார். 

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1000 கிராமப் பாலங்களை நிர்மாணித்து  கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை  இலகுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும்  என்றும்  அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நோயால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் பாலம்  நிர்மாணிக்கும் திட்டம் தாமதமாகி வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளது. 

ஊழியர்களை  சுகாதார பரிந்துரைகளின்படி பாதுகாப்பாக அழைத்து வரவும், பால நிர்மாணப்  பணியைத் தொடரவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.