(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு நகர  மண்டப வளாகத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டை குற்றவாளி ஒருவர் வாபஸ் பெற்றுள்ளார்.

 குறித்த வழக்கில் 2 ஆவது பிரதிவாதியாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்பட்ட  சக்திவேல் லங்கேஸ்வரன் என்பவரே, தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன் முறையீட்டை வாபஸ் பெற்றுள்ளார். தனது சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். பஞ்சாட்சரம் ஊடாக இது தொடர்பிலான விடயங்களை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு முன் வைத்து அவர் இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

 இந்நிலையில்,  சக்திவேல் லங்கேஸ்வரனின் மேன் முறையீட்டை தள்ளுபடி செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம்,  மேல் நீதிமன்றில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  விதிக்கப்பட்ட 30 வருட சிறைத் தண்டனை, கடந்த 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் வகையில் கணக்கிடப்படும் என அறிவித்தது.