ஜப்பானின் சய்ட்டாமா சுப்பர் அரினா உள்ளக அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானை 90 - 75 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்ட ஐக்கிய அமெரிக்கா 7ஆவது தொடர்ச்சியான தடவையாக பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.


இந்த வெற்றியின் மூலம் ஐக்கிய அமெரிக்க பெண்கள் அணியில் இடம்பெற்ற சிரேஷ்ட வீராங்கனைகளான சூ பேர்ட், டயனா டௌராசி ஆகிய இருவரும் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதலாவது வீராங்கனைகளாகினர்.

இன்றைய வெற்றியுடன் ஐக்கிய அமெரிக்க பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி ஒலிம்பிக் அரங்கில் தொடர்ச்சியாக 55 போட்டிகளில் தோல்வி அடையாத அணியாகத் திகழ்கின்றது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக் விளையாட்டு விழா அரை இறுதிப் போட்டியிலேயே ஐக்கிய அமெரிக்க பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி கடைசியாக தோல்வி அடைந்திருந்தது.

10 நிமிடங்களைக் கொண்ட நான்கு ஆட்டநேர பகுதிகளின் முதல் 3இல் ஐக்கிய அமெரிக்கா முறையே 23 - 14, 27 - 25, 25 - 17 என முன்னிலை வகித்தது. கடைசி ஆட்ட நேர பகுதியை ஜப்பான் 19 - 15 என தனதாக்கிக்கொண்டிருந்தது.

இப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஜப்பான், ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் அதி சிறந்த பெறுபேறைப் பதிவுசெய்துகொண்டது.