(இராஜதுரை ஹஷான்)
பொது போக்குவரத்து சேவை தற்போது பாதுகாப்பற்ற தன்மையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பயணிகள் சமூக இடைவெளியை பேணி பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இயலுமான அளவு புகையிரதங்களை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

எனினும் புகையிரத சேவையாளர்கள் பலர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் , இந்நிலைமை தொடர்ந்தால் புகையிரத போக்குவரத்து சேவையினை முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும்  தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை குறிப்பாக புகையிரத போக்குவரத்து சேவை அவதானமிக்கதாக காணப்படுகிறது. புகையிரத போக்குவரத்து சேவை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த காலங்களை விட தற்போது அதி தீவிரமாக பரவலடைந்துள்ளது. இதனால் மருத்துவ துறைக்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் பல நெருக்கடிகளை  எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான நிலையில் பொது போக்குவரத்து சேவை தற்போது நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுகிறது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்கிறோம்.

பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவையினை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். தினசரி காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையினை இலட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவது தற்போதைய நிலையில் அவதானமிக்கது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடப்படுகிறது என்றார்.