இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தினை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(08.08.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்றொழிலாளர்களின்  அத்துமீறல்  உட்பட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில்,

இந்தியக் கடற்றொழிலார்களின் அத்துமீறல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், சுருக்கு வலை, உள்ளூர் இழுவைப் படகு, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், குழை போட்டு மீன் பிடித்தல் போன்ற சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கருத்தினையும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

மேலும், புரெவிப் புயலால்  ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறும், நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்ட  இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளை விற்பனை செய்து, கிடைக்கின்ற பணத்தினை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.