கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று பகல் சிறப்பாக நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றம் இல்லாமல் ஆரம்பமானது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இராத உற்சவம் இம்முறை இடம்பெறவில்லை.

இன்று காலை விநாயகர் மற்றும் வசந்த மண்டப விசேட பூஜைகள் நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று.

தீர்த்தக்கரைக்கு சுவாமி வீதியுலா சென்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சுகாதார நடைமுறையை பேணி சிறப்பாக நடைபெற்றது.

தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இன்று தீர்த்தக்கேணியில் தெற்பை அணி விரதமிருந்து தீர்த்தோற்சவத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.