இரட்டை கொலையுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா முருகனூர் பகுதியில் வசித்த தாயும், சிறு குழந்தையும் காணாமல் போயிருந்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், முறைப்பாட்டிற்கமைய வவுனியா பொலிசாரால் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட விசாரணையில் அவர் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். 

குறித்த தாய் மற்றும் அவரது குழந்தையை தானே கொலை செய்து தீயிட்டு எரித்ததாகவும், அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த வாக்கு மூலத்திற்கமைய முருகனூர் பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டிற்கு நேற்றையதினம் சென்ற பொலிசார் அங்கு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உயிரிழந்த பெண் யாழ், கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்றும், குறித்த இளைஞர் அவரது காதலன் எனவும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.