(எம்.மனோசித்ரா)
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


வைத்திய நிபுணர்களின் சங்கத்தினால் , நாட்டிலுள்ள கொவிட்  நிலைமையை கருத்திற் கொண்டு தற்காலிகமாக இந்த பேரணியை கைவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் இணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நெருக்கடிகளை  புரிந்து கொள்வதாகவும், இருந்த போதிலும் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு சகலரதும் பாதுகாப்பிற்காக ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த நிலைமைகள் சீரான பின்னர் போராட்டத்தை நாம் நிச்சயம் தொடருவோம் என்றார்.