பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'சமியா' வின் மனைவி 'குடு ஆஷா' கைது..!

By J.G.Stephan

07 Aug, 2021 | 01:26 PM
image

(எம்.மனோசித்ரா)
பிரபல போதைப்பொருள்  கடத்தல்காரரான  கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த 'சமியா' எனப்படும் சமிந்த எதிரிசூரிய என்ற சந்தேக நபரின் மனைவியான 'குடு ஆஷா' எனப்படும் தில்ஹானி அத்துரசிங்க சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினால் நேற்று வெள்ளிக்கிழமை தில்ஹானி அத்துரசிங்க என்ற பெயருடைய 'குடு ஆஷா' என்ற 46 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த சமிந்த எதிரிசூரிய என்ற பெயருடைய 'சமியா' வின் மனைவியாவார்.

மேலும்,  சமியா எனப்படும் சமிந்த எதிரிசூரிய என்பவரால் சட்ட விரோதமாக பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை உபயோகித்தமை மற்றும் அந்த பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்து கொள்வனவில் ஈடுபட்டமை தொடர்பிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணால் மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் 50 இலட்சம் செலவில் கடை அறையொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 2009 , 2020 ஆண்டுகளில் இவருடைய வங்கி கணக்கின் ஊடாக 23 மில்லியன் ரூபா பண பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பெண் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right