(எம்.மனோசித்ரா)
சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பிக்கும் வகையிலான சுமார் 500 காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து அவற்றை போலியான சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக பதிவேற்றிய 25 வயதுடைய சந்தேக நபரொருவர் இன்று சனிக்கிழமை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தொடர்ச்சியாக சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பிக்கும் காட்சிகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏதேனுமொரு வழியில் சமூக வலைத்தளங்களில் அல்லது இணையதளங்களில்  பதிவேற்றப்பட்டால் , பதிவேற்றப்பட்ட அந்த நொடியிலேயே அதனுடன் தொடர்புடைய நபர்களை இனங்காணமுடியும்.

இது தொடர்பான விசேட தொழிநுட்ப பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 17 ஆம் திகதி குறித்த தொழிநுட்ப பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பிக்கும் காட்சிகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன. இவை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய இது போன்று முறையற்ற சுமார் 500 காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்தமை தொடர்பில் படல்கும்புர  பிரதேசத்தைச்  சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபரொருவர் இன்று சனிக்கிழமை காலை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இதற்காக பயன்படுத்திய துணைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பிக்கும் வகையிலான காணொளிகளையும் புகைப்படங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை போலியான சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக நாளாந்தம் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.