டெல்டா பரவலை இனங்காண்பதற்கு கொழும்பில் ஜூலை மாதம் முதலாம் வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனையில் 19.3 சதவீதமானோர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டது. 

ஆனால் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் இந்த அளவானது 75 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளதாக ஸ்ரீஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் டெல்டா நிலைமையைக் கண்டறிவதற்காக எழுமாறாக மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனையை முன்னெடுப்பதற்கான மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

இது குறித்த அறிக்கையை விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி வரை 1910 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 3,23,339 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 2,88,307 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 30,211 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.