ஆஸ்திரிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையமொன்றில் சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதுடைய 3 இளைஞர்களுக்கு 2 வருடங்கள் முதல் மூன்றரை வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சல்ஸ்பேர்க் மாநிலத்தில் தென்னேகயு பிராந்தியத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனும் இளைஞர்கள் மூவரும் தங்கியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவதினம் குறிப்பிட்ட சிறுவனை கூரான கண்ணாடி துண்டொன்றால் குத்திக் கொல்லப் போவதாக அச்சுறுத்தி அந்த நிலையத்துக்கு வெளியிலிருந்த குகைக்கு பலவந்தமாக அழைத்துச் சென்ற மேற்படி இளைஞர்கள் மூவரும் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர்களில் ஒருவர், சிறுவன் தம்மிடமிருந்து தலா 10 யூரோ கட்டணத்தை பெற மேற்படி நடவடிக்கைக்கு தானாகவே முன்வந்து இணங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார் 

அதேசமயம் இரண்டாவது இளைஞர் கூறுகையில், தாம் சம்பவ தினம் குடியோதையில் இருந்ததால் தாம் சிறுவனால் முன்வைக்கப்பட்ட குற்றத்தை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். 

எனினும் அவர்களது விவாதத்தை நீதிமன்றம் நிராகரித்து அவர்களுக்கு சிறைத்தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.