(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதற்கமைய சகல அரச நிகழ்வுகளும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதோடு , திருமண வைபவங்கள் , மரண இறுதி சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றக் கூடியோர் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கொவிட் செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில்,

தற்போது நாட்டிலுள்ள கொவிட் நிலைமையை கவனத்தில் கொண்டு திருமணம் உள்ளிட்ட ஏனைய வைபவங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதற்கமைய திருமணம் உள்ளிட்ட வைபவங்களை நடத்தக்கூடிய மண்டபங்களின் இருக்கைகளின் எண்ணிக்கை 500 ஐ விட அதிகமாகக் காணப்பட்டால் மாத்திரம் அதிகபட்சம் 150 பேர் அதில் கலந்துகொள்ள முடியும்.

அதேபோன்று மண்டபங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை 500 ஐ விடக் குறைவாயின் அதிகபட்சம் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும். 

மேலும் மரண இறுதி சடங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

அரச சேவைகளில் தேவைக்கேற்ப பொறுத்தமான ஊழியர்களை மாத்திரம் நிறுவனத்தலைவர்கள் சேவைக்கு அழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இம் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சகல அரச உற்சவங்களுக்கும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.