சவால்கள் நிறைந்த ஊடக துறையில் 91 வருடங்களை எட்டுவது ஒரு பாரிய சாதனை யாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில், தனது 91 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன்.

இந்த சாதனையை நிலைநாட்ட பாடுபட்ட உழைத்த முன்னாள் மற்றும் தற்கால ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.

வீரகேசரி பத்திரிகையானது, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நடுநிலையாக செய்திகளையும் ஆய்வு கட்டுரைகளையும் கொண்டு செல்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான விடயங்களை காலத்திற்கேற்ற வண்ணம் கொண்டு செல்வதில் வீரகேசரி பத்திரிகை வெற்றி கண்டுள்ளது. 

விசேடமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றிலே வீரகேசரி பத்திரிகை யின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

அரசியல் தலைவர்களின் போராட்டங்களையும் மக்களின் அபிலாஷைகளையும் சமூகமய மாக்குவதில் வீரகேசரி பத்திரிகை அளப்பெரிய சேவையாற்றி உள்ளது.

மேலும், வீரகேசரி குழுமமானது பல திறமை மிக்க ஊடகவியலாளர்களை உருவாக்கி உள்ளது என்பது மறக்கமுடியாத ஒரு உண்மையாகும். இன்று பல்வேறு ஊடகத்துறைகளில் பணியாற்றும் நண்பர்களின் ஆரம்பம் வீரகேசரி குழுமமாகும்.

தொடர்ந்தும் மக்களை மையமாகக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் வீரகேசரி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்கிறேன். 

புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள வீரகேசரி குடும்பத்தின் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களிற்கும் எனது வாழ்த்துதல்களும் நன்றிகளும் உரித்தாகுக என மேலும் குறிப்பிட்டுள்ளார்.