விளையாட்டுத்துறை அமைச்சின் ஓராண்டு முன்னேற்றம், தொலைநோக்கு தொடர்பான மீளாய்வு மற்றும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களைப் பாராட்டும் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தை “டன்கன் வைட்” கேட்போர் கூடம் எனப் பெயரிடல் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறே விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நபர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

விளையாட்டுத் துறை பற்றி எழுதப்பட்ட பல நூல்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் அசோக குணதிலக எழுதிய “விளையாட்டு நிர்வாகமும் விளையாட்டின் எதிர்கால செல்வழி” மற்றும் லலித் குணவர்தன எழுதிய “டன்கன் வைட்” ஆகிய நூல்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்களின் சம்மேளனத்தின் தலைரவர் சபரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்த உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டீ.எம்.ஆர்.பீ.திசாநாயக்க உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.