தமிழில் முன்னணி நடிகைகளான வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி, சுபிக்ஷா ஆகிய நால்வர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கன்னி தீவு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து வெளியிடுவதற்கு தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடிகை திரிஷா நடிப்பில் உருவான 'கர்ஜனை' படத்தை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கன்னி தீவு'.

இப்படத்தில் முன்னணி நடிகைகளான வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி, சுபிக்ஷா ஆகிய நால்வர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் இசை அமைத்திருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் பேசுகையில்,' வடசென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது.

பால்ய பிராயத்திலிருந்தே உற்ற தோழிகளான வரலட்சுமி, ஐஸ்வர்யா,  சுபிக்ஷா, ஆஷ்னா ஆகிய நான்கு பெண்களும் சமூக அக்கறை உள்ளவர்கள்.

இந்த உலகத்தை காப்பாற்ற இயலாவிட்டாலும் தங்கள் தாங்கள் வசிக்கும் பகுதியையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக நீடிக்கும் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அப்பகுதி மக்களின் ஆதரவுடன் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார்கள்.

ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகு நான்கு பேரின் வாழ்விலும் பெரிய அளவிலான சிக்கல்கள் உண்டாகிறது. அவை என்ன? அவற்றிலிருந்து இந்த நான்கு பேரும் மீண்டார்களா.

இல்லையா? என்பதை பரபரப்பான எக்சன் திரில்லர் ஜேனரில் விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.

படத்தில் நான்கு நாயகிகள் இருப்பதாலும், அவர்கள் சாகசங்கள் செய்வதாலும் பொருத்தமாக இருக்கும் என்று 'கன்னி தீவு' என பெயரிட்டிருக்கிறோம். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப உச்சகட்ட காட்சியை ஒரு தீவில் படமாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும். படத்தின் படப்பிடிப்பும், இறுதிகட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது' என்றார்.

கிருத்திகா புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும்  'கன்னித்தீவு' என்ற படத்தின் பெயர், உலக தமிழர்களுக்கு பாரிய அளவில் பரிச்சயம் என்பதாலும், நான்கு கதாநாயகிகள் நடித்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.