(பாராளுமன்ற செய்தியாளர்)

தேசியப் பட்டியலிலாவது அரைப்பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் முன்மொழிந்துள்ளது.

இன்றும் நாளையுமே பாராளுமன்றம் கூடும் - காரணம் இதுதான் ! | Virakesari.lk

இந்த ஒன்றியம் சார்பில் விசேட குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்த அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

அரசாங்க சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசேட குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டது.

சகல தேர்தல்களுக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் பெர்னாந்துபுள்ளே சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலானதாகவே உள்ளது. பெண்கள் தொடர்பில் சமூகத்தின் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.

தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் வீகிதாசார தேர்தல் முறையானது பெண்களுக்கு அந்தளவு சாதகமானதாக இல்லையென்றும் தெரிவித்தார்.

நாட்டுக்குள் தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.