தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 91 வருடங்களை பூர்த்தி செய்கின்றது.

அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் பல தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனக்கென தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 92 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்பேசும் மக்களின் இதயங்களில் தனக்கென தனியிடத்தைப்பிடித்துள்ளது. வீரகேசரி பல சவால்கள் மிக்க  ஊடகப்பயணத்தில் 91 ஆண்டுகளை பூர்த்திசெய்து 92 ஆவது அகவையில் மிடுக்குடன் காலடி எடுத்து வைக்கின்றது.

ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் மாத்திரமல்லாமால் உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் அதன் நாமத்தை உச்சரிக்கும் அளவுக்கும் ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே  ஸ்தாபிக்கப்பட்ட வீரகேசரி நாளிதழ் பலதரப்பட்ட அரசியல், பொருளாதாரம் உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது, தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தன்னை பலமாக வைத்து தொடர்ந்து அவர்களுக்கு பக்கபலமாகவே இருந்து வந்துள்ளதுடன் தற்போதும் இருந்து வருகின்றது.

இலங்கையில் முதன்மையான ஊடகங்கள் பல உருவாகிய காலத்தில் ஆணித்தரமாக தனது 91 ஆவது வயதில் கால்த்தடம் பதிக்கும் போது இன்னும் அதன் வளர்ச்சி திடகாத்திரமாக இருக்கின்ற அதேவேளை, டிஜிட்டலிலும் தனியிடத்தைப் பிடித்துள்ளமையை இங்கு மறந்துவிட முடியாது.

தற்போதைய டிஜிட்டல் உலகிலும் வீரகேசரி தனக்கென தனியிடத்தைப் பிடித்து வைத்துள்ளதென்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

நவீன உலகில் ஊடகத்துறையில் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் வளர்ச்சிகளுக்கு மத்தியில் வீரகேசரியின் கம்பீரமான பயணம் என்பது அபரிமிதமாகவேயுள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கி வரும் செய்திச் சேவை, இன்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். இதன் மூலம் சிறந்த இணையத்தளம் என்ற விருதையும்  பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது .

இவை அனைத்திற்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒலி ஒளிபரப்பு சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் , நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சு ஊடகங்களுக்கு இணையாக இலத்திரனியல் ஊடகங்கள் செல்வாக்கு செலுத்திவரும் இந்நேரத்திலும் அவற்றுக்கு எதிராக முகம்கொடுத்து  தனது அபிமான வாசகர்களின்  இதயம் கவர்ந்த வீரகேசரி தேசிய தமிழ் நாளிதழாகவும் வாராந்த வெளியீடாகவும்  வெளிவந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளிலும், சமூக, கலை கலாசாரத்திலும் மக்களிக் நலனிலும் நாட்டு நலனிலும் கடந்த 90 வருடங்களாக தனது பங்களிப்பினையும் செல்வாக்கையும் வீரகேசரி செலுத்தி வருகின்றது.

இலங்கையின் ஊடகத்துறையில் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்து வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  ஸ்தாபனம், தனது வெற்றிகரமான பயணத்தில் வீரகேசரி நாளிதழ், வீரகேசரி வாரவெளியீடு, மித்திரன் செய்தித்தாள்களை வெளியிட்டு வருகின்றது.

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குநர் குமார் நடேசனினதும் பணிப்பாளர் சபையினதும் வழிகாட்டல்களினாலும் புதிய முயற்சிகளினாலும் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு ஆலவிருட்சம்போல் இலங்கையின் தலைநகரில் தலைநிமிரந்து நிற்கும் வீரகேசரி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் தானே  என்ற வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதுவும் தமிழ்ப்பேசும் மக்களுக்கும் இளந்த தலைமுறையினருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

ஊடகத்துறையில் மாத்திரமன்றி, அச்சகத்துறையிலும் இன்று வீரகேசரி தன்னிகரற்ற நிறுவனமாக விளங்கிவருகின்ற நிலையில், கொழும்பு - ஏக்கலை பிரதேசத்தில் தனது நவீன ஊடக (Digital Media ) காரியாலயத்தையும் அச்சு இயந்திரத் தொகுதியையும் நிறுவி அதன்மூலம் டிஜிட்டல் ஊடகத்துறையிலும் அச்சகத்துறையிலும் நவீன மாற்றங்களை உள்வாங்கி நாட்டின் "ஊடக நிறுவன அபிவிருத்தியிலும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

வீரகேசரி அச்சு ஊடகத்துறையில் பல பத்திரிகைகளை பிரசுரித்து வருகின்ற போதிலும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் மக்களுக்கு தனது இணையத்தளத்தையும் ஆரம்பித்து தற்போதும் அதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் செய்தி இணையத்தளம் என்ற பெருமையும் இலங்கையில் முதல் முதலாக செயற்படுத்தப்பட்ட மின்னிதழ் (e-paper) என்ற பெருமையும் வீரகேசரியையே சாரும்.

அந்தவகையில் தற்போது வீரகேசரி டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டுள்ளதோடு இணையத்தள செய்தி சேவைகளையும் தனது வாசகர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதேவேளை, நவீன இலத்திரனியல் ஊடகங்களும் தொழில்நுட்பங்களும் உலகில் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் வேளையில், தனது அபிமான வாசகர்களின் தேவைகளை அறிந்து வீரகேசரி எதிர்காலத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளது.

இலங்கை வரலாற்றில் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்கு வீரகேசரி ஓர் பல்கலைக்கழகமாக விளங்குகின்றதென்றால் அது மிகையாகது. கடந்த 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில்,  ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சியில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் ஆற்றிய மகத்தான பணிகள்  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவாகும்.

இலங்கைப் பத்திரிகை நிறுவனமொன்று தொடர்ச்சியாக நீண்டகாலம் செயற்பட்டு தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிகள் காலத்தால் அழியாதவை. 92 ஆவது ஆண்டில் தனது காலடியை எடுத்து வைக்கும் வீரகேசரி, நிறுவனத்தை  ஆரம்பித்த சுப்பிரமணியம் செட்டியார் மற்றும் அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய சகல அறிஞர்களையும் கல்விமான்களையும் இப்பத்திரிகையின் ஆசிரியர்களையும் இந்நிறுவனத்தின் தலைவர்களாக விளங்கிய பெருமக்களையும் மற்றும் வீரகேசரியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அயராது நல்கிய எழுத்தாளர்களையும் வாசகர்களையும்  வாடிக்கையாளர்களையும்  நாம் நினைவுகூர வேண்டியது இந்நாளில் அவசியமாகும்.

ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் வாசகர்களேயாவர். இவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இருந்தால்தான் ஒரு பத்திரிகை 'ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி' வளர்ச்சியடைய முடியும். வீரகேசரி தலைநிமிர்ந்து நின்று முக்கியமாக தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான பணிகளுக்குக்  காரணம்  இப்பத்திரிகை கொண்டுள்ள பக்கச்சார்பற்ற கொள்கையும் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவுமாகும்.

தமிழ்ப்பேசும் மக்கள் பலரும் கடல்கடந்து வாழ்ந்தும் வீரகேசரிக்கு நல்கிவரும் ஆதரவு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் பேருதவியாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தம். வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டு வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  நிறுவனம் தங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன்றைய பொன்னான தருணத்தில் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றது.