(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்று காரணமாக கொழும்பில் பணிபுரிந்த இளைஞர்கள் மலையகம் திரும்பி வேலையில்லாதுள்ளதால் அவர்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை முறையாக அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாகவிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சபையில் தெரிவித்தார்.

மக்கள் தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை : அதனால் தான் பாராளுமன்றை  கூட்டி பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு ...

பாராளுமனத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொவிட் தொற்றால் கொழும்பில் பணிப்புரிந்து மீண்டும் மலையகம் திரும்பியுள்ள எமது இளைஞர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மலையக குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை முழுமையாக வழங்கினால் பயனுடைதாக அமையும். வறுமை காரணமாகவே ஹிசாலினி போன்ற சிறுமிகள் கொழும்பில் வந்து பணிப்புரிகின்றனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிளங்கன் வைத்தியசாலையானது மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறனர்.

கொவிட் தொற்றுக்கும் சிகிச்சை வழங்கும் ஒரே வைத்தியசாலையாகவுள்ளது. இங்கு 60 வரையான கட்டில்களே உள்ளன. திறப்பதற்கு தயார் நிலையில் உள்ள மஸ்கெலியா வைத்தியசாலையை உடனடியாக திறக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.