கொவிட் செயலணியை நம்பினால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாது: அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் - ரணில்

By J.G.Stephan

05 Aug, 2021 | 05:21 PM
image

(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்துவதிலும், மக்களின் உயிரை காப்பாற்றுவதிலும் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர இதற்காக மாதக்கணக்கில் காலத்தை கடத்த வேண்டாம். உடனடியாக கொவிட் அவசரகால நிதியமொன்றை உருவாக்க முடியுமென்றால் அது ஆரோக்கியமானதாக அமையும் என சபையில் கூறிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கொவிட் செயலணிக்கூட்டத்தில் தீர்மானம் எடுத்து கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முன்னர் மக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், உலகில் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டுள்ளது. ஐரோப்பாவில் சகல பகுதிகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவல் காணப்படுகின்றது. எமக்கும் இங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியாக வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து மட்டும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆய்வுகளுக்கு அமைய அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மூலமாக 60-66 வீதமானோரையே  பாதுகாக்க முடியுமென கூறப்படுகின்றது.

 பைசர் அதனை விடவும் குறைவாம். இப்போதும் தடுப்பூசிகளை ஏற்றப்படுகின்றது. ஆனால் வைரஸ் எவ்வாறு பரவிக்கொண்டுள்ளது என்பதை இன்னமும் எம்மால் கண்டறிய முடியாதுள்ளது. அதுமட்டுமல்ல தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் தொற்று இங்கு பரவாத வகையில் கட்டுப்படுத்தியாக வேண்டும். இப்போதும் எமது நாட்டில் பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

ஒதுக்கீட்டு முறைமைகளுக்கு சென்று ஒட்சிசன், தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். இதற்கு முன்னரும் அவசர முறைமைகளை நாம் கையாண்டுள்ளோம். ஆகவே எங்கிருந்து எடுக்க முடியுமோ அங்கிருந்து உடனடியாக தடுப்பூசிகளை ஒட்சிசன் ஆகியவற்றை எடுங்கள். நிதி ஒதுக்கீடுகள் குறித்து பாராளுமன்றத்தில் பின்னர் தீர்மானித்துக்கொள்ள முடியும். இப்போதும் வைத்தியசாலைகளில் இடம் இல்லாது மக்கள் வெளியில் படுத்து உறங்குகின்றனர். ஏன் இராணுவத்தின் கைவசம் இருக்கும் படுக்கைகளை பயன்படுத்த முடியாது. தற்காலிகமாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

நாட்டின் நிலைமையில் எம்மால் உதவ முடியும். ஆனால், சுகாதார பிரதி பணிப்பாளர் கூறிய விடயங்களுக்கு நாமும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் கொவிட் நிலைமைகளை செயலணியில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதென்றால் மக்கள் உயிரிழப்பார்கள், ஆனால்  எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டிவரும். இந்த விவகாரத்தில் அமைச்சரவை பொறுப்பை எடுத்துக்கொண்டு விசேட குழுவொன்றை நியமித்து நிலைமைகளை கையாளுங்கள், நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right