(எம்.மனோசித்ரா)

சகல அரச உத்தியோகத்தர்களையும் சேவைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார், சிறு குழந்தைகளை உடைய தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு உரிய தரப்பினருக்கு பரிந்துரைக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் பொது செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவிக்கையில் ,

02/2021 (3) என்ற சுற்று நிரூபத்தின் ஊடாக சகல அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறு குழந்தைகளை உடைய தாய்மாரும் உள்ளனர். இவர்களையும் சேவைக்கு அழைத்துள்ளமை பாதுகாப்பற்றது.

அத்தோடு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது கொவிட் அபாய நிலைமை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கமும் பொது நிர்வாக அமைச்சும் எவ்வித பொறுப்பும் இன்றி இது போன்ற சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு கர்ப்பிணி தாய்மார் , பாலூட்டும் தாய்மார், சிறு குழந்தைகளை உடைய தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு உரிய சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இங்கு முறைப்பாடளித்துள்ளோம் என்றார்.