கொரோனாவுக்கு எதிராக எல்லா நாடுகளிலும் 10 சதவீதத்தினருக்காவது முதலாம் கட்ட தடுப்பூசி கிடைப்பதற்கு உதவும் வகையில் மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தி நாடுகள், பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 கட்ட தடுப்பூசிபோட்ட பின்னர் மூன்றாவது தடுப்பூசி போட்டுவிட விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு  முதலாம் கட்ட தடுப்பூசி போடப்படவில்லை.

இதன் காரணமாக குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் முதலாம் கட்ட தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்வதற்கு உதவும் வகையில், மூன்றாம் கட்டம் தடுப்பூசி போடும் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையொட்டி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் கூறுகையில், 

“ஏற்கனவே இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாம் கட்டம் தடுப்பூசி செலுத்துவது, கொரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதில் பயன் தருமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு பணக்கார நாடுகள் அதிகமாக உதவ வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.