(எம்.மனோசித்ரா)

வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலைமை டெல்டா வைரஸ் பரவலின் அச்சுறுத்தலை தெளிவாகக் காண்பிக்கிறது. 

நான்காவது அலையின் நிலைமையே நாடு தற்போது இருக்கிறது. வைரஸ் பரவலுக்கும் தடுப்பூசி வழங்கலுக்கும் இடையிலான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாயின் குறுகிய காலத்திற்கேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரேயொரு மாற்று வழியாகும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 ஆகக் காணப்பட்டாலும் , அது சரியான தரவு இல்லை. பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவின் அடிப்படையிலேயே தொற்றாளர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் சுமார் 20,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் 2,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். தற்போது 10,000 - 12,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் 2,000 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

முன்னர் காணப்பட்ட வைரஸினால் ஒரு தொற்றாளரிடமிருந்து 3 - 4 பேருக்கு தொற்று பரவக் கூடிய நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா திரிபானது ஒரு தொற்றாளரிடமிருந்து 10 வரையில் தொற்றை பரப்பக்கூடியது. எனவே இனங்காணப்படும் தொற்றாளர்களை விட 4 அல்லது 5 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படலாம்.

நான்காவது அலையின் நிலையிலேயே நாம் தற்போது இருக்கின்றோம். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 400 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் வைத்தியசாலையின் சிகிச்சையளிக்கும் அறைகள் நிரம்பியுள்ளன. எவ்வாறிருப்பினும் வைத்தியசாலைகளின் நிலைமைகளை எம்மால் காண்பிக்க முடியாது. அது எமது மூலதர்மம் அல்ல.

தற்போது கட்டில்கள் நிரம்பி நிலத்தில் தொற்றாளர்கள் காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துடன் அதற்கு அப்பால் சென்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டத்திலிருக்கின்றோம். 

நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவதானிக்கும் போது ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் மூவர் உயிரிழக்கின்றனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு டெல்டா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் குறித்து சிந்திக்க வேண்டும். எனவே இப்போதிருந்தாவது வைரஸ் பரவலுக்கும் தடுப்பூசி வழங்கலுக்கும் இடையிலான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாயின் குறுகிய காலத்திற்கேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இது மாத்திரமே ஒரே மாற்று வழியாகும் என்றார்.