(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்கள் சகலரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுதந்திரவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், குறித்த சுற்று நிரூபத்திலிருந்து சகல சுகாதார  ஊழியர்கள்  நீக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் பணிக்கு சமூகமளிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தால் இன்று வியாழக்கிழமை முற்பகல் பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் , ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போன்று சுகாதார தரப்பினரையும் சேவைக்கு அழைப்பது பொறுத்தமற்றது என்பதை வலியுறுத்தியே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல் முற்பகல் 11 வரை பிரதான வைத்தியசாலைகளில் நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. எவ்வாறிருப்பினும் சுகாதார அமைச்சினால் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்த சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டதால் பணிபகிஷ்கரிப்பு முற்பகல் 11 மணியளவில் கைவிடப்பட்டது.