(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தில் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்வதால் மாத்திரம் இலவச கல்விக்கு ஏற்படபோகும் பாதிப்பை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியாது. ஆகவே இச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக நீக்கிக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் தற்போது அரசாங்கத்திற்கு சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் பங்காளி தரப்பினர்கள் இச்சட்டமூலத்தை கொண்டு வரவேண்டிய திருத்தம் தொடர்பில் தங்களின் கட்சி மட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார்கள்.

இலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தில் ஒரு சில விடயங்களில் மாத்திரம் திருத்தம் மேற்கொண்டால் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது.  சட்ட மூலம் திருத்தம் செய்யப்பட்டு பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.