(எம்.மனோசித்ரா)

பொது போக்குவரத்துக்களில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றமை தொடர்பில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பில், தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக பயணிகளை ஏற்றிச் சென்ற 11 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொது போக்குவரத்துக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக பெரும்பாலான பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று புதன்கிழமை கொழும்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 11 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 11 பேரூந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் , மேல் மாகாண எல்லைப்பகுதிகளிலும், நாடளாவிய ரீதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனவே தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, குறித்த பேரூந்துகளும் பொலிஸாரின் பொறுப்பிலெடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.