இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. 

இது 2 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் இதுவாகும்.

இந் நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலந்து அணியை திக்குமுக்காட வைத்தது.

பும்ரா, ஷமி ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை சீரான இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினர்.

அதனால் இங்கிலாந்து இறுதியில் 65.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக தலைவர் ஜோ ரூட் 64 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ரோஹத் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தலா ஒன்பது ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.