ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நேற்று கைதுசெய்யப்பட்ட 44 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட குழுவில் 22 ஆண் ஆசிரியர்கள், 16 பெண் ஆசிரியர்கள் மற்றும் 6 தனிநபர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதன்போது 10 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்ட விரோத மக்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டமை, பிரதான வீதியை முடக்கியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு கொழும்பு மாநகர சபையின் சுகாதார அலுவலகம் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொண்டது.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் முதன்மை தொழிற்சங்கங்களின் வாகனப் போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தை சுற்றி நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஊர்வலம் கடவத்தை, கொட்டாவ, மொரட்டுவை மற்றும் வெலிசர ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பித்து ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தது.