(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஆளுங்கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டமூலம் திருத்தமின்றி சபையில் சமர்பிக்கப்பட்டால் ஆதரிக்க முடியாது என்ற அறிவிப்பையே ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது. 

இந்நிலையில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாளைமறுதினம்  வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படவிருந்த நிலையில் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

இன்று சபையில் சிறப்புக் கூற்றொன்றை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்க, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா இல்லையா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறித்த சட்டமூலம் தொடர்பில் பொது மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலும் கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் வழங்கவேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் சபையில் விவாதத்திற்கு சமர்பிக்கப்படாது என்றார்.