(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்தவின் இரு விரல்களில் பாரிய காயம் ஏற்பட்டு அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 

இவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் குழுவிற்கு பொறுப்பாக மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்த என்பவர் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், பொலிஸாரின் அறிவித்தலை மீறி முன்னோக்கிச் சென்றமையால் வீதிதடை போடப்பட்டிருந்தது. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த வீதிதடைகள் தகர்த்தப்பட்டுள்ளதோடு, அதனை தாண்டி அவர்கள் முன்னோக்கிச் சென்றுள்ளனர்.

இதன் போது மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்த பாரிய காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.