(எம்.மனோசித்ரா)

ஹிஷாலினியின் இறப்பு மற்றும் நடைபெற்றிருக்கக் கூடிய மோசடி தொடர்பில் விரைவானதும் பாகுபாடற்றதுமான விசாரணைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறவோ அல்லது குறிப்பிட்ட ஒரு இனத்தையோ மதத்தையோ இழிவுபடுத்தக் கூடாது என்பதையும் ,  மலையக சிறுவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய மாகாண கத்தோலிக்க ஆயர் கண்டி மறைமாவட்டம் பேரருட்திரு ஆயர் வியானி பெர்னாண்டோ ஆண்டகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பள்ளியிலும் குடும்பத்தாருடன் இருந்திருக்க வேண்டிய சிறுமி ஹிஷாலினி பழக்கமற்ற இடத்திற்கு வீட்டுப் பணிப்பெண்னாக அனுப்பப்பட்டிருக்கக் கூடாது என்பது எமது உறுதியான நம்பிக்கை. ஹிஷாலினியின் பெற்றோர் கடன் சுமையிலிருந்தமை , சிறுமியொருவரை வீட்டு பணிக்கு அமர்த்துவதற்கு கட்டாயப்படுத்திய பொருளாதார நிலைமையும் தற்போதைய மற்றும் முந்தைய அரசுகள் விட்ட தவறுகள் எனும் வகையில் இலங்கையர்களாகிய நாம் வெட்கமடைகின்றோம்.

நாட்டின் சட்ட கட்டமைப்பானது சிறுவர்களை பாதுகாக்க முடியாதது என்பது வெட்கக் கேடானது. சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படலுக்கு எதிராக நீண்ட கால மற்றும் பரந்த கொள்கை திட்டங்கள் அவசியமாகும். இதற்கான சில ஆலோசனைகளை நாம் இந்த கடிதத்தின் ஊடாக முன்வைக்கின்றோம்.

ஹிஷாலினியின் இறப்பு மற்றும் நடைபெற்றிருகக் கூடிய மோசடி தொடர்பில் விரைவானதும் பாகுபாடற்றதுமான விசாரணைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறவோ அல்லது குறிப்பிட்ட ஒரு இனத்தையோ மதத்தையோ இழிவுபடுத்த வேண்டாம்.

இவ்வாறான சம்பவங்களை தெரியப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்பதோடு , பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை  வலியுறுத்துகின்றோம்.

மலையக சமூகத்தை சேர்ந்த சிறுவர்களின் கல்வியை உன்னிப்பாக கண்காணிப்பதோடு , பாடசாலை இடைவிலகலைத் தடுக்கவும் , இடைவிலகல் ஏற்பட்டால் மாணவர்களின் நல்வாழ்வினையும் உரிமைகளையும் கண்காணிக்கவும் செயலூக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட எந்தவொரு சிறார்களும் வேலைக்கமர்த்தப்படக் கூடாது என்பதற்கான சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இவை தொடர்பில் அரசு மற்றும் பிற கட்சிகளின் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.