(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய பாதுகாப்பு என்பது வெறுமனே நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்துவது அல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்தும் பிரதான வளங்களை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, கெரவலபிட்டிய மின்நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார். 

இதன்போது பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சபையில் அமர்ந்திருந்தார், அவர் இருக்கும் போதே தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய அநுரகுமார எம்.பி தெரிவித்ததானது,

கெரவலபிட்டிய யுகதணவி மின்சார உற்பத்தி நிலையம் அரச நிறுவனங்கள் பலவற்றிற்கு பங்கிடப்பட்டே நிருவகிக்கப்படுகின்றது. இவற்றில் அரச திறைசேரியின் பங்குகளில் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் புதிதாக ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கெரவலபிட்டியவில் உருவாக்கவும் அதன் மூலமாகவே 350 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், லக்தணவி  நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றினை செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவர்களின் மூலமாக எரிவாயு உற்பத்தி செய்யவும் அமெரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது என்றார்.