(எம்.மனோசித்ரா)
பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வீதியில் சவப்பெட்டி எரிக்கப்பட்டமையால் அரச சொத்தான வீதி சேதமாக்கப்பட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் பிரதான வீதியில் போக்குவரத்து முடங்கியிருந்ததோடு, மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் விரல்களில் பாரிய காயம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதான வீதியில் சவப்பெட்டி எரிக்கப்பட்டமையால் அரச சொத்தான பிரதான வீதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பில், தலங்கம பொலிஸாரால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமர கொஸ்வத்த என்ற வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரும், கோகிலா ஹன்சமாலி பெரேரா என்ற 29 வயதுடைய பெண்னொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.