இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்காமில் ஆரம்பமாகிறது.

Image

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந் நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் (புதன்கிழமை) நாட்டிங்காமில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. 

இது 2 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதால் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் காயமடைந்துள்ளார். 

பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் பவுன்சராக வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக பதம் பார்த்தது. 

பந்து தாக்கிய வேகத்தில் தலைக்குள் அதிர்வு இருப்பதாக உணர்ந்ததால், அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் தாக்கம் இருப்பதால் முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் ஆடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காயத்தால் சுப்மான் கில் தாயகம் திரும்பிய நிலையில் மயங்க் அகர்வாலும் இப்போது காயமடைந்திருப்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த பிறகு வலுவான போட்டியாளராக நிரூபிக்கப்பட்ட கே.எல் ராகுலுடன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆரம்ப வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

மறுபுறம் இங்கிலாந்து அணிக்கு சமநிலையை கொண்டு வந்த பென் ஸ்டோக்ஸின் வெற்றிடத்தை நிரப்ப, சார் குர்ரன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவரால் துடுப்பாட்டத்தில் சகலதுறைகளிலும் திறன்களை வெளிப்படுத்த முடியும்.

முழங்கை அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் இத் தொடரில் பங்கெடுக்கவில்லை.

இந்த ஆண்டு பெப்ரவரியில் இந்தியா நடத்திய நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. 

இறுதி டெஸ்டில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடரை 3-1 என கைப்பற்றியது.