ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தொழிற்சங்கங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் அதிபர்களும் ஆசிரியர்களை பாடசாலைக்கு வரும்படி கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவது அரசியல் யாப்பிலுள்ள 3 ஆம்  மற்றும் 14 (1 ஈ)  அத்தியாயங்களை மீறும் செயலாகும். 

எனவே ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் கொள்ளாது தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே எமது போராட்டத்திற்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம்  முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.  

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து  கடந்த மாதம் 12 திகதியிலிருந்து இன்று வரை 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை தீர்த்தல், கொத்தலாவலை சட்டத்தை வாபஸ் பெறல், நிகழ் நிலைக்கல்விக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல்  வேண்டும்'  போன்ற  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து  நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டப் பேரணிகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. 

இச்சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதியைப் பெற்று தீர்வினைப் பெற்றுத்தருவதாக கூறிய போதும் தீர்வு கிடைக்கவில்லை. 

நேற்றைய தினம் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக கூறப்பட்டது. ஆனால் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக்கூறி அதனை மறுத்து விட்டது. ்

பிரதமர், கல்வி அமைச்சர்  சம்பள ஆணைக்குழு என அனைத்து தரப்புமே அதிபர்,ஆசிரியர் சம்பள பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவது இவ்விடயத்தில் அவர்கள் இதயசுத்தியுடன் செயற்படாமையினையே எமக்கு வெளிப்படுத்துகின்றது. 

எனவே எமது போராட்டத்திற்கான நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம்  முன்னெடுக்கப்படும்.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி (ED/09/12/06/01/02/2021) ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படாத நிலையிலும், பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார முன்னெடுப்புக்கள் தொடர்பில் கூறப்படாத நிலையிலும் ஆசிரியர்களை பாடசாலைக்கு அழைப்பது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகும். 

தொழிற்சங்கங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் அதிபர்களும் ஆசிரியர்களை பாடசாலைக்கு வரும்படி கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவது அரசியல் யாப்பிலுள்ள 3 ஆம்  மற்றும் 14 (1 ஈ)  அத்தியாயங்களை மீறும் செயலாகும். 

எனவே ஆசிரியர்கள் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஆசிரியர்கள் தாமாக விடுமுறை (leave) கோரி அதனை அறிவித்தால் மட்டுமே அதனை பதியமுடியும்.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட ஊழியர்கள் கூட மாதக்கணக்கில் தொழிற்சங்கங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அவர்களின் தொழில் இரத்துச் செய்யப்படவில்லை.     

இன்று புதன்கிழமை எமது அதிபர்,ஆசிரியர்களுக்காக 30 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

எனவே ஆசிரியர்களின் தொழில் தொடர்பாக பூரண பாதுகாப்பினை இத் தொழிற்சங்கங்கள் வழங்குகின்றன. எனவே ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் கொள்ளாது தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் உபதலைவர் பிரதீப் தெரிவித்தார்.