(இராஜதுரை ஹஷான்)
நல்ல விடயங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என ரஷ்யாவின் லெலின் போராடினார். ஆனால் இலங்கையில் ஸ்டாலின் போன்றவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட் டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். ஆசிரியர்- அதிபர் போராட்டங்கள் ஊடாக கொவிட் நான்காம் அலையினை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டம், அதற்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் - அதிபர் சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு தோற்றம் பெறவில்லை. 24 வருட காலமாக நிலவும் பிரச்சினைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தீர்வு வழங்கினால் . அது ஏனைய பிரிவுகளில் தாக்கம் செலுத்தும், ஆசிரிய சேவையில் மாத்திரம் வேதன பிரச்சினை கிடையாது. இவர்களது கோரிக்கையை ஏற்று சம்பளத்தை அதிகரித்தால், ஏனைய தொழிற்சங்கத்தினர்கள் அவர்களுக்கும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதன் காரணமாகவே அரச சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர்- அதிபர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்பதை அறிந்துக் கொண்டு ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்படுவது அவர்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடையும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் போராட்டத்தில் ஈடுப்படுவது வெறுக்கத்தக்க செயற்பாடாகும் என்றார்.