(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே, ஆனால் நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என சபையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாகும், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கையிலே நீர்பாசன துறை அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.