(எம்.மனோசித்ரா)
நாட்டை முடக்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து கொவிட்  பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இரு கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், டெல்டா பரவலுடன் கொவிட் வைரஸ் பரவல் அபாயம் நாட்டில் காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இதற்கான பொறுப்பை சகலரும் ஏற்க வேண்டும் என்பதோடு, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமே சிறந்த முறைமை என்று உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சகல சுகாதார தரப்புக்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அதற்கமைய இலங்கையில் மிகவும் வினைத்திறனான வகையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் இரு மாதங்களுக்குள் இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் , குறிப்பாக 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் கொவிட் பரவும் வேகம் குறைவடையும் என்றும் நாம் நம்புகின்றோம் என்றார். 

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்கள் சகலரும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை. எனினும் கர்ப்பிணிகள் தொடர்பில் அந்தந்த நிறுவன பிரதானிகள் தீர்மானிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.