(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 113 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 53,143 பேர் தனிமைப்படுத்தல்விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற இடங்களில் 2999 வாகனங்களும் அவற்றில் பயணித்த பயணித்த 5494 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 53 வாகனங்களில் பயணித்த 103 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்கள் சகலரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் அவர்களும், மருத்துவ சிகிச்சை, நெருங்கிய உறவினர்களின் மரண சடங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக செல்பவர்களுக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறு மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் போது பொலிஸாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.